தனியார் வானிலை ஆய்வாளர்களை நம்ப வேண்டாம் தமிழக அரசு தரும் தகவல்களே உறுதியானது : வருவாய்த்துறை அமைச்சர் அறிவுரை

சென்னை: தமிழகத்தின் வானிலை குறித்து தமிழக அரசு தரும் தகவல்கள் மட்டுமே உறுதியானது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார். தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மேட்டூர் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை எழிலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை பெய்யும் போது தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய மற்றும் மழைநீர் தேங்கக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக 21,597 பேர் கொண்ட மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சாலையில் விழும் மரங்களை வெட்டி அகற்ற 1000 பேர் தயாராக உள்ளனர். மக்களை பாதுகாப்புடன் தங்க வைக்க 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2394 மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதேபோன்று பவானி சாகர் அணையும், 102 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை பெய்யும், லேசான மழை பெய்யும், மழை பெய்யாது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழக அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மட்டுமே மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது நிறைய வெதர்மேன் (வானிலை ஆய்வாளர்கள்) வந்து விட்டனர். சீஷனுக்கு ஏற்றவாறு திடீர் திடீரென சிலர் இப்படி வருகிறார்கள். அவர்களுக்கு எந்த அனுபவமும் இல்லை. யூகத்தில் சில நேரம் மழை பெய்து விடலாம். வானிலை என்பது மணிக்கு மணி மாறிக்கொண்டே இருக்கும். அதனால் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன் உடனிருந்தனர்.

பழைய கார்கள் அகற்றம்

வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சென்னை, எழிலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட பழைய கார்கள் கேட்பாரற்று கிடந்தன. அந்த காரில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலை இருந்தது. அந்த கார்களை அகற்ற அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories: