சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.28ல் துவக்கம்

அலங்காநல்லூர்: சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.28ம் தேதி துவங்குகிறது. அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலானது வரலாற்று சிறப்பு மிக்கது. ஒளவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று முருகன் கேட்டு நாவல் மரத்திலிருந்து காட்சி தந்த புனித தலமாகும். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது நாவல்பழம் பழுக்கும் ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த கந்தசஷ்டி விழா இந்தாண்டு வரும் 28ம் தேதி காலை  விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, உற்சவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 29ம் தேதி வழக்கமான பூஜை, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 30ம் தேதி காலை யானை வாகனத்திலும், 31ம் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும்,  நவ.1ம் தேதி சப்பர வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 2ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். 5.30 மணிக்கு முருகபெருமான் கஜமுகசூரனையும், சிங்கமுக சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெறுகிறது. 3ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: