சுபஸ்ரீ மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரத போராட்டம்

வேளச்சேரி: குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த சுபஸ்ரீ (23), துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 12ம் தேதி தனது மொபட்டில்  துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றபோது, பள்ளிக்கரணை அருகே சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் காற்றில் பறந்து, சுபஸ்ரீ மீது விழுந்தது. நிலை தடுமாறிய அவர், சாலையில் விழுந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி இறந்தார். நீதிமன்ற கண்டனத்துக்கு பிறகு பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து, அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பில், சுபஸ்ரீக்கு  நடந்தது விபத்து அல்ல, விதிமீறலால் நடந்த கொலை என வழக்கு பதிவு செய்ய வேண்டும். கொலைக்கு காரணமான கவுன்சிலருக்கு கடுங்காவல் தண்டனை அளிக்க வேண்டும். பேனர் கலாச்சாரத்தை  ஒழிக்க வேண்டும்.கடமையை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அறப்போர் இயக்கம், மக்கள் பாதை இயக்கம், சட்டபஞ்சாயத்து இயக்கம், தேசிய மக்கள் சக்தி உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: