தீபாவளி பார்சலை டெலிவரி செய்யாத கூரியர் நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமெரிக்காவில் உள்ள மகளுக்கு, அப்பா அனுப்பிய தீபாவளி பரிசு பார்சலை கொண்டு சேர்காத கூரியர் நிறுவனத்துக்கு ₹45 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அடையாறு, காந்தி நகரை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் வெளிநாட்டில் இருக்கும் மகளுக்கு, சம்பந்தம் கடந்த 2016ம் ஆண்டு தீபாவளி பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த பார்சலில் ₹11,850 மதிப்புள்ள புடவைகள், மேலும் பல்வேறு ஆடைகள், பலகாரங்கள் இருந்தன. இந்த பார்சலை மயிலாப்பூரில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து அனுப்பியுள்ளார். ஆனால், அந்த பார்சல் அமெரிக்காவில் உள்ள மகளுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து சம்பந்தம், சம்மந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். பலமுறை சென்று கேட்டபோது, பார்சல் வேறு முகவரிக்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சம்பந்தம், சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அலட்சிய போக்குடன் செயல்பட்ட கூரியர் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு பார்சல் தொகை, மன உளைச்சலுக்கு அபராதம் என ₹45 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: