ராஜீவ்காந்தி சாலையில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் விற்பனை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

துரைப்பாக்கம்: சென்னை ராஜீவ்காந்தி சாலை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி, சிறுசேரி வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இச்சாலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இச்சாலையில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இதனை கருத்தில் கொண்டு, இச்சாலையில் தனியார் உணவகங்கள், சிற்றுண்டிகள் செயல்படுகின்றன. இதேபோல், ஆங்காங்கே சாலையோர தள்ளுவண்டி உணவகம், டீக்கடை, பிரியாணி மற்றும் குளிர்பான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலை, பெருங்குடி ராஜீவ்காந்தி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் உணவகங்களில் தின்பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கடை முன்பு திறந்த நிலையில் தின்பண்டங்களை வைத்திருப்பதால்,  அவ்வழியே வாகனங்கள் செல்லும்போது சாலையில் உள்ள புழுதி பறந்து தின்பண்டங்களின் மீது   படிந்து விடுகின்றன.

இப்படி சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்களை பொதுமக்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாங்கி சாப்பிடுவதால் ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்கின்றனர். அதன்பேரில், மேற்கண்ட சாலையில் உள்ள கடைகளுக்கு ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளை, கடைக்காரர்கள் சரிகட்டி அனுப்பி விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் பாதசாரிகள் சர்வீஸ் சாலையில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்களை விற்கும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: