பாரம்பரிய கட்டிடத்தை புனரமைக்க தாமதம் செய்ததால் ரூ.2 கோடியில் இருந்து ரூ.6 கோடியானது திட்டச்செலவு

* நிதித்துறையின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறல்

* அதிகாரிகளின் அலட்சியத்தால் நிதி நெருக்கடியில் சிக்கும் அரசு

சென்னை: பாரம்பரிய கட்டிடத்தை புனரமைக்க தாமதம் செய்ததால் ₹2 கோடியில் இருந்து ₹6 கோடியாக திட்டச்செலவு அதிகரித்துள்ளது.   

 சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் உள்ளது. முறையாக பராமரிக்காததால் கட்டிடங்களில் ஆங்காங்கே செடிகள் முளைத்தும், பெரும்பாலான பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2016ல் வர்தா புயல் ஏற்பட்ட போது, கொதிகலன் இயக்கக கட்டிடத்தில் கடுமையாக சேதமடைந்தது. இந்த நிலையில், அந்த கொதிகலன் இயக்கக கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 13ம் தேதி கொதிகலன் இயக்கக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதற்கிடையே இந்த கட்டிடத்தை புனரமைக்க ₹2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து உடனடியாக டெண்டர் விட்டு ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்து புனரமைப்பு பணியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து புனரமைப்பு பணியை பொதுப்பணித்துறை தொடங்கியது.

இதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த புனரமைப்பு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு ₹4 கோடி கூடுதல் நிதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், நிதித்துறை சார்பில் மிகவும் தாமதமாக பணிகளை தொடங்கி விட்டு நிதி கேட்பதா என்று பொதுப்பணித்துறைக்கு பதில் அனுப்பியுள்ளது. மேலும், ஒவ்வொரு முறையும் பொதுப்பணித்துறை சார்பில் கூடுதல் நிதி கேட்டு அறிக்கை வந்து கொண்டே இருப்பதாக நிதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனால், உடனடியாக புனரமைப்பு பணிக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்ேபாதைக்கு கொதிகலன் இயக்ககத்தில் பூச்சு வேலை மட்டும் நடந்து வருகிறது. இந்த நிதி கிடைத்தால் மட்டுமே முழு வீச்சில் பணிகளை செய்ய முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.₹1 லட்சத்தில் வாங்கிய எல்இடி காட்சி பலகை 1 மாதத்தில் பழுது: பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் தெளிவுரையுடன் தினமும் ஒரு திருக்குறள் ஓடும் வகையில் எல்இடி காட்சி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகை ₹1 லட்சத்து வாங்கி கடந்த செப்டம்பர் 24ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பலகை வைத்து 1 மாதம் கூட ஆகாத நிலையில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து அந்த எல்இடி காட்சி பலகை சரி செய்யப்பட்டு மீண்டும் காட்சி பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, அந்த துறை ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: