தமிழகம் முழுவதும் ஆட்கள் பற்றாக்குறையால் உணவு பாதுகாப்பு மாதிரி 6ல் இருந்து 2 ஆக குறைப்பு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: தமிழகம் முழுவதும் ஆட்கள் பற்றாக்குறையால் உணவு பாதுகாப்பு மாதிரி 6ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், மளிகை கடைகள், சாலையோரக்கடைகள் என்று  அனைத்து வகையான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மாவட்டங்கள் தோறும் உள்ள உணவு பாதுகாப்புத்துறையிடம் எப்எஸ்எஸ்ஏஐ சான்று பெற்றிருக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களில் காலாவதியாகும் தேதி, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் முத்திரை போன்றவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதோடு சிக்கன்பக்கோடா, பஜ்ஜி, பிரைட் ரைஸ் போன்றவற்றில் நிறமூட்டிகள் பயன்படுத்த கூடாது என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளது. ஆனால் நிறமூட்டிகள், உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது, தரமற்ற போலி உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது போன்ற பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறி வருகிறது.

இதனை தடுக்க மாவட்டங்கள் தோறும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, உணவுபொருட்கள் தரம் குறித்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இதனை ஆய்வு செய்ய மாவட்டங்கள் தோறும் ஆய்வுக்கூடங்கள் இல்லை. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. உணவுப்பொருட்களை ஆய்வு செய்ய போதிய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், மாவட்டங்கள் தோறும் ஆய்வுக்கூடங்கள் இல்லாத காரணத்தினாலும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரையில் உணவு மாதிரிக்கான ரிசல்ட் வருவதற்கு தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஒரு பொருளில் தரம் இல்லை என்று கருதினால் கட்டாயம் 6 மாதிரிகள் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் 2 மாதிரிகள் சேகரித்தால் போதும் என்று மாதிரி சேகரிப்பின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மனிதன் உயிர்வாழ்வதற்கான உணவுப்பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டறிய மாவட்டங்கள் தோறும் ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தி, ஆட்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: