தமிழகம் முழுவதும் நடந்து வந்த அணை, ஏரி புனரமைப்பு பணி நிறுத்தம்

* ஒப்பந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுரை

* அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வந்த அணைகள், ஏரிகளின் புனரமைப்பு பணி திடீரென நிறுத்தி வைக்க தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள், மின்வாரியத்தில் 38 அணைகள், வேளாண்துறையில் 2 அணைகள் உள்ளது. .பல ஆண்டுகளாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அணைகளின் கொள்ளளவு குறைந்தும் காணப்பட்டது. இதை தொடர்ந்து .உலக வங்கி நிதியுதவியின் ₹745 கோடியில் 127 அணைகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை 2012ல் தொடங்கி 2018ல் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 2014ம் தேதிக்கு பிறகு இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு தொடங்கப்பட்டது. இதனால், பணிகளை 2018 ஜூனில் முடிக்க காலதாமதம் ஏற்பட்டதால், வரும் 2020 ஜூன் வரை மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 69 அணைகளில 67 அணைகளில் கரைகளை பலப்படுத்துவது, மதகுகளை சரி செய்வது போன்ற பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மின்வாரிய கட்டுபாட்டில் 38 அணைகளில் 12 அணைகளில் இந்த பணிகள் முடிவுற்றுள்ளன. 8 அணைகளில் நடைபெற்றுவருகின்றன. மீதமுள்ள 18 அணைகளில் பணிகள் தொடங்கப்பட வேண்டியுள்ளது.

 56 அணைகளில் படிந்துள்ள மண் அளவுகள் ஆய்வு செய்யப்பட்டு, 42 அணைகளில் பணிகள் ஆய்வு முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளில் 14 அணைகளில் ஆய்வு பணி நடந்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளில் தற்காலிகமாக புனரமைப்பு பணியை நிறுத்தி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ₹499.69 கோடியில் நடக்கும் 1829 பணிகளில் 500க்கும் மேற்பட்ட பணிகள் தொடங்க வேண்டியுள்ளது. 200க்கும் மேற்பட்ட பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் முடிந்து விட்டது. நீர்வளநிலவள திட்டத்தின் கீழ் ₹743 கோடியில் 1325 ஏரிகள், 107 அணைக்கட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டு கிணறுகள் அமைக்கும் பணிகளில் 50 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: