புழல் ஏரிக்கரையில் திடீர் விரிசல்: தண்ணீர் வெளியேறும் அபாயம்

புழல்: புழல் ஏரிக்கரையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறும் ஆபத்துள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போது 350 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரி மற்றும் மழைநீர் வரத்து வினாடிக்கு 705 கன அடியாக உள்ளது. இதில் இருந்து  சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக 8 கன அடி அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது பருவமழை துவங்கிய நிலையில், புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, ஏரியில் மழைநீர் நிரம்பி வருகிறது. புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, நாரவாரிகுப்பம், செங்குன்றம் ஆலமரம்  பகுதி வரை சுமார் 6 கிமீ தூரத்துக்கு கரைகள் உள்ளன. புழல் ஏரியில் பல கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறும் நிலையில், மேற்கண்ட பகுதிகளின் கரைகளை பலப்படுத்தும் பணிகள்  நடைபெறவில்லை.

இந்தநிலையில், புழல் ஏரியின் ஜோன்ஸ் டவர் அருகே கரையில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் புழல் ஏரியில் முழு கொள்ளவை எட்டும்போது, இதன் வழியே தண்ணீர் வெளியேறும் வாய்ப்புள்ளது. இதுதவிர,  ஏரிக்கரை மேலே செல்லும் சாலையின் ஒரு பக்கத்தில் சுமார் 4 கிமீ தூரத்துக்கு மரங்கள் வளர்ந்துள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் பொதுப்பணி துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, விரிசல் ஏற்பட்ட பகுதிகளை சீரமைத்து புழல் ஏரியின் அனைத்து கரைகளையும் பலப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: