விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிய விவகாரம் ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் அலுவலகத்தில் கேரள போலீஸ் சோதனை

சென்னை: கேரளாவில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிய விவகாரம் தொடர்பாக, சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ேநற்று கேரளா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கிடைத்த பல முக்கிய ஆவணங்களை வைத்து கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கொச்சி அருகே மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறி 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகள் முறையாக அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக  கடலோர ஒழுங்குமுறை ஆணையம் குடியிருப்பில் நோட்டீஸ் ஒட்டியது. அந்த நோட்டீசை எதிர்த்து குடியிப்போர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பிறகு முறையாக அனுமதி இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் கட்டிடங்களை இடிக்க கோரியும், குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கிய கேரள அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து கேரள மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கேரளாவில் குடியிருப்பு கட்டிய ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ேநற்று கேரள போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கிற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு அதிகாரிகளுக்கு பல லட்சம் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: