நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரளாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி சிறப்பு குழுக்களை அமைத்தது தமிழக அரசு

சென்னை: கேரளாவுடன் நடத்திய நதிநீர் பங்கீடு பேச்சுவார்த்தையின்படி சிறப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர்  பிரச்னைகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக  பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சுமூகத்  தீர்வும் ஏற்படவில்லை. இந்த  நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் 25ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளாவிற்கு சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தம் குறித்த மறுஆய்வு மற்றும் அதன் மீதான விசாரணை குறித்து ஒரு குழுவும், பாண்டியாறு - புன்னம்புழா ஆறுகளை செய்லபடுத்துவது தொடர்பாக ஒரு குழுவும் அமைக்க  தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் முடிவெடுத்திருந்தது. அதனடிப்படையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்த குழுவில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பத்தலைவர் சுப்ரமணியன் , பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற சிறப்பு தலைமை பொறியாளர் இளங்கோவன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்திற்கு பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தமிழரசன்  கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்தின் கண்காணிப்பு பொறியாளர் முணாவர் சுல்தானா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுக்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

Related Stories: