தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிவறைகள் மூடல்

வேலூர்: தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டண கழிவறைகள் திடீரென மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு, சேலம் மற்றும் அண்டை மாநில நகரமான திருப்பதிக்கு சுமார் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். பயணிகள் வசதிக்கென பஸ் நிலையத்தில் ஓய்வு அறை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்டண கழிப்பறைகள் முறையாக பராமரிக்காததால் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. கடும் துர்நாற்றம் வீசியது. கடந்த மாதம் 23ம்தேதி தேசிய துப்புரவு பணியாளர் நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி ஆய்வு செய்தார்.

அப்போது, சென்னை மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அருகே உள்ள 2 கழிவறைகள் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனைக் பார்த்து, தூய்மைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக 2 கழிவறைகளும் மூடப்பட்டுள்ளது.

இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதவாது: புதிய கழிவறைகள் கட்டுவதற்காக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள 2 கழிவறைகளும் மூடப்பட்டுள்ளதால் பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஸ் நிலையத்தில் காலியாக உள்ள இடத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் பஸ் நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றத்துடன் தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவல நிலை உள்ளது. பஸ் நிலையத்தில் ஆங்கேங்கே தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உள்ளதால் டெங்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் மாநகராட்சி சார்பில் வழங்க வேண்டிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கிடைக்கவில்லை. எனவே, மூடப்பட்டுள்ள கழிவறைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: