புழல்,: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 24, 25, 26 மற்றும் 32வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம், சரஸ்வதி நகர், சாரதி நகர், பத்மாவதி நகர் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் நகர், ரெட்டேரி, லட்சுமிபுரம், புதிய லட்சுமிபுரம், விநாயகபுரம், கல்பாளையம், டீச்சர்ஸ் காலனி, செகரட்டரியேட் காலனி, ராஜன் நகர், ரமணி நகர், செல்வம் நகர், கணபதி நகர், திருமால் நகர், சப்தகிரி நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக சுடுகாடு, 26வது வார்டுக்கு உட்பட்ட புழல் விநாயகபுரத்தில் அமைந்துள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சுடுகாட்டை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை அதிகாரிகள் தடுக்காததால், தற்போது சுடுகாடு ஒரு ஏக்கர் பரப்பளவாக சுருங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள் சடலங்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கின்றனர். மேலும், சுடுகாட்டில் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பை கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்குள்ள சிலர், கால்நடை கழிவுகளையும் சுடுகாடு வளாகத்தில் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.