பந்திப்பூர் பகுதியில் இருவரை பலி கொண்ட ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், சவுடனஹள்ளி மற்றும் ஹண்டிபுரா பகுதியில் கடந்த 7ம் ேததி காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிவலிங்கப்பா(55) என்பவரை புலி தாக்கி கொன்றது. அதன்பின் கடந்த ஒரு வாரத்தில் இந்தப் புலி 3 மாடுகளையும், கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியைச் சேர்ந்த சிவமாதய்யா என்பவரையும் தாக்கி கொன்றுள்ளது. எனவே அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து, வனப்பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலியை பிடிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குநர் பாலச்சந்திரா தலைமையில் 6 கும்கி யானைகள், 6 மருத்துவ குழுக்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் சவுடனஹள்ளி, வுண்டிபுரா இடையில் உள்ள வனத்தில் அடர்ந்த புதரில் இந்த புலி இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக மருத்துவ குழு வரவழைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் புலி மயக்கமடைந்தது. உடனே பொிய அளவிலான வலை கொண்டு வரப்பட்டு போர்த்தி தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றினர். மனிதர்களையும், கால்நடைகளையும் கொன்று வந்த ஆட்கொல்லி புலி, 6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் உயிருடன் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  இந்த புலியை காட்டில் விடுவதா?, சரணாலயத்தில் பராமரிப்பதா? என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி முடிவு எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: