அரூரில் நள்ளிரவில் நிலஅதிர்வு பீதி மக்கள் அலறியடித்து ஓட்டம்

அரூர்: அரூரில் நில அதிர்வு பீதி ஏற்பட்டதால், வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  தர்மபுரி மாவட்டம், அரூர் நகருக்குட்பட்ட திரு.வி.க.நகர், குறிஞ்சி நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில், வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் திடீரென உருண்டோடியதாக தகவல் பரவியது. இதனால் நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என பீதியடைந்த மக்கள், அலறியடித்தபடி நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதே போல், அரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், நில அதிர்வு ஏற்பட்டதாக, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து அரூர் நகரப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென பாத்திரங்கள் உருண்டோடியது. அடுக்கி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் கவிழ்ந்து விழுந்தது. ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்டதை போல் உணர்ந்ததால், உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தோம். இதேபோல் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நண்பர்களும், உறவினர்களும் பொருட்கள் உருண்டோடியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். ஆனால், இது நிலஅதிர்வா? என்பது எங்களுக்கு தெரியவில்லை,’ என்றனர்.

இதுகுறித்து அரூர் கோட்டாட்சியர் பிரதாப், தர்மபுரியில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. நிலஅதிர்வு ஏற்பட்டிருந்தால், சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியிருக்கும். ஆனால், தற்போது நிலஅதிர்வு குறித்து எவ்வித தகவலும் வரவில்லை என தெரிவித்துள்ளனர். பழுதடைந்து கிடக்கும் சீஸ்மோ கிராப்: இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் சேலம், சென்னை, கொடைக்கானல் என தமிழகத்தில் 3 இடங்களில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவி அமைக்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் அலுவலக, வானிலை மையத்தில் உள்ள சீஸ்மோகிராப் கருவி, செயல்படவில்லை. இதுகுறித்து டெல்லியில் உள்ள தலைமை மையத்திற்கு தகவல் தெரிவித்தும், சரி செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, அரூரில் நேற்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் நிலஅதிர்வு குறித்து அறிய முடியவில்லை. ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி சேலம், தர்மபுரியில் ஏற்பட்ட நிலஅதிர்வும், பழுது காரணமாக இந்த சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: