7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் நவ.26ல் மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு

சென்னை: சத்துணவு மையங்களை மூடுவதை தவிர்க்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொருளாளர் பேயத்தேவன் கூறியதாவது: தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் என்ற பெயரில் ஊழியர்களை அரசு ஏமாற்றி வருகிறது.  எனவே, ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடுவதை தவிர்க்க வேண்டும்,  சமையல் எரிவாயுவை அரசே வழங்க வேண்டும், உணவு செலவு  மானியத்தை உயர்த்த வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  நாளை மாவட்ட அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது.தொடர்ந்து, 23ம் தேதி பிரசார விளக்க பொதுக்கூட்டமும், நவம்பர் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியும், 26ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது.  தொடர்ந்து டிசம்பர் 23ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: