க்ரீன்பார்க் கல்வி குழுமத்தில் 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம்: புகைப்படம் வெளியீடு

நாமக்கல்: நாமக்கல் க்ரீன்பார்க் கல்வி குழுமத்தில் 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக கைப்பற்ற பணம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய க்ரீன்பார்க் கல்விக்குழுமத்தில் நீட் பயிற்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4வது நாட்களாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடத்தப்பட்ட இந்த சோதனையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்ட ரூ.30 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.150 கோடி வரை கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் கட்டுக்கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த கல்விக்குழுமத்தை தவிர அதற்கு சொந்தமான நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை உள்ளிட்ட 17 கிளைகளில் சோதனை நடைபெற்றது. உரிமையாளர் சரவணன் என்பவற்றின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும், மாணவர்களிடம் கட்டணம் பெற்ற விவரம் தொடர்பாக சரவணன் வைத்திருந்த டைரி உட்பட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

கிரீன்பார்க் பள்ளியில் நீட் பயிற்சிக்கு குறைந்தபட்சமாக 3 லட்சமும், மாணவர்களின் பொருளாதார நிலையை பொறுத்து 10 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கபட்டதாக கூறப்படுகிறது. நீட் பயிற்சியளிக்க வெளிமாநிலங்களில் இருந்து அதிக ஊதியத்தில் பயிற்றுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களிடம் பெற்ற கட்டணங்கள் பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, சரவணனின் 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்றுநர்களின் வங்கி கணக்கையும் ஆராய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

Related Stories: