விஷயத்தை கண்டுபிடிக்க மலையைத் தோண்டியது காங்கிரஸ்: சோனியா காந்தி குறித்து அரியானா முதல்வர் மனோகர் சர்ச்சை பேச்சு

டெல்லி: காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா குறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாராஷ்ரா மற்றும் அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல்  நடைபெறவுள்ளது. இதற்காக இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சோனிபட் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.  அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், ராகுல் காந்தி அக்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பின்னர், அடுத்த தலைவராக அவரின் குடும்பத்தை சேர்ந்தவர் வரமாட்டார் எனவும் கூறினார்.

குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வருவது நல்லது என்பதால் அவரது முடிவை நாங்கள் வரவேற்றோம். பின்னர், நாடு முழுவதும் தலைவரை தேடத் தொடங்கினர். ஆனால், மூன்று மாதங்களுக்கு பிறகு சோனியாவை காங்கிரஸ்  கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இது ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க அதுவும் இறந்த ஒன்றை கண்டுபிடிக்க ஒரு மலையைத் தோண்டி எடுப்பது போன்றது என கூறினார்.

காங்கிரஸ் தரப்பில், பாஜக முதல்வர் கூறிய கருத்து மலிவானது மற்றும் ஆட்சேபனைக்குரியது மட்டுமல்ல, இது பாஜகவின் பெண்கள் விரோத தன்மையையும் காட்டுகிறது. மனோகர் லால் கட்டரின் கருத்தை நாங்கள் கண்டிக்கிறோம், அவர்  உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சோனியாவை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான விளக்கத்தையும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில், மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் ராகுல், தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார். அதில் தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் தலைவராக மாட்டார்கள் எனக் கூற காரணம், வேறு தலைவரை நியமிக்க  வேண்டும் என்பதே. அதுவரையில் இடைக்கால தலைவராக தான் சோனியாவை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினர். மேலும், மனோகர் இதுபோன்று அவ்வபோது சர்ச்சை கருத்துகளை கூறுவதை இயல்பாக கொண்டவர் எனவும், அவர் பெண்களுக்கு  எதிரான குணமுடையவர் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: