வாடகை குறைப்பு, நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆணையர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 55 வழக்குகள் இன்று விசாரணை

சென்னை: வாடகை குறைப்பு, நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரே நாளில் ஆணையர் நீதிமன்றத்தில் 55 வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் வீடு, கடைகளும், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும் உள்ளது. இந்த வீடு, கடை, நிலங்கள் வாடகை மற்றும் குத்தகைக்கு  விட்டு வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.  இந்தநிலையில், வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு  ஜூலை 1ம் தேதி முதல் கோயில் வீடு, கடை வாடகை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு வாடகைதாரர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் ஏற்கனவே கட்டிய வாடகையை செலுத்தி வந்தனர். இதனால், லட்சக்கணக்கில் வாடகை பாக்கி உள்ளதாக கூறி கோயில் நிர்வாகம் சார்பில் வாடகைதாரர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர் மனுவை தள்ளுபடி செய்தனர். இதை தொடர்ந்து ஆணையர் நீதிமன்றத்தில் பலரும் வாடகையை குறைக்கவும், பாக்கி  தொகையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை ஆணையர் நீதிமன்றத்தில் வேகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் இன்று மட்டும் 55 மனுக்கள் ஆணையர் நீதிமன்றத்தில் வருகிறது. இதில், சென்னை மண்டலத்தில் 10 வழக்குகள் அடக்கம். ஆணையர் நீதிமன்றத்தில் இன்று வரவுள்ள பெரும்பாலான வழக்குகள் வாடகையை குறைக்க  கோரியும், ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக தொடரப்பட்டது. இந்த வழக்குகள் முடிவுக்கு வரும் பட்சத்தில் அறநிலையத்துறை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தற்போது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் 1200 வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இந்த வழக்குகள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தால் ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கும்’ என்றார்.

Related Stories: