சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

சென்னை: சீன அதிபர் வருகையின்போது எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் சிறப்பாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு  தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 மற்றும் 12ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். மேலும் சீன அதிபர் வருகையால் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் வரலாறு காணாத வகையில் போலீசார் பாதுகாப்பு  பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக கடந்த 5ம் தேதி முதலே சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் இரவும் , பகலுமாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலை நெடுக்கிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும்  மோப்ப நாய்கள் உதவியுடன் அங்குளம் அங்குளமாக சோதனை நடத்தினர்.

மேலும் 20 அடிக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், சீன அதிபர் செல்லும் பாதையான ஓஎம்ஆர் சாலை முழுவதும் சிசிடிவி  கண்காணிப்பு வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர். இது போன்று சீன அதிபர் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் வரையில் போலீசாரின் பணி முக்கிய இடம் வகித்தது. இதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்கி  டாக்கி மூலம் பாதுகாப்பு பணி மேற்கொண்ட அனைத்து போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இது பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: