நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் மனைவி உயிருடன் எரித்து கொலை: ஆட்டோ டிரைவர் கைது

சென்னை: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தேனாம்பேட்டை, ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜீவமணி (36). ஆட்டோ டிரைவரான இவர், ஏற்கனவே திருமணமான லட்சுமி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லட்சுமி முதல் கணவருக்கு பிறந்த  குழந்தையுடன் ஜீவமணியுடன் வாழ்ந்து வந்தார். லட்சுமி அனைவரிடமும் சகஜமான பேசக்கூடியவர் என்று கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் நடத்தையில் ஜீவமணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் குடித்துவிட்டு வந்து, லட்சுமியை அடித்து உதைத்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கணவன், மனைவி இடையே மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜீவமணி, லட்சுமியை சரமாரி தாக்கி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து அவர் மீது ஊற்றி தீ  வைத்துள்ளார். இதில் வலி தங்க முடியாமல் லட்சுமி அலறி துடித்தார். பிறகு அருகில் இருந்தவர்கள் லட்சுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 70 விழுக்காடு தீக்காயங்களுடன் லட்சுமி சிகிச்சை பெற்று  வந்தார்.

Advertising
Advertising

தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், மருத்துவமனைக்கு சென்று லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது லட்சுமி, தனது கணவர் ஜீவமணி எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தீவைத்து கொளுத்தியதாக வாக்குமூலம்  அளித்தார். அதைதொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜீவமணியை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து போலீசார்   கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஜீவமணியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: