மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்த போது மோடி- ஜின்பிங்குக்கு மொழி பெயர்த்தவர் யார்?

சென்னை: மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்த போது மோடி- ஜின்பிங்குக்கு மொழி பெயர்த்தவர் யார்? என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்தது. இதனால் இருநாட்டு தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்து கொள்ளாமலேயே உரையாடினர். இந்தச் சந்திப்பின் போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்திய அதிகாரியான மதுசூதனன் ரவீந்திரன். இவர் தான் இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். மதுசூதனன் ரவீந்திரன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் (அரசியல்) ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு இவரை கேட்டு கொண்டனர். அதன் அடிப்படையில் அந்த சந்திப்பின் போதும் உடனிருந்தார் மதுசூதனன் ரவீந்திரன். தற்போதும் அவரே மோடி- ஜின்பிங் சந்திப்பின் போது மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுசூதனன் ரவீந்திரன் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறகு மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டு 2013ல் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். தற்போது, சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக மதுசூதனன் ரவீந்திரன் இருந்து வருகிறார். சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகளை சரளமான பேசக்கூடியவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த மதுசூதனன் ரவீந்திரன் இந்திய வெளியுறவுப் பணியில் (ஐஎப்எஸ்) 2007ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். பணியில் பெரும்பாலான நாட்களை சீனாவில் தான் மதுசூதனன் ரவீந்திரன் இருந்துள்ளார். முதல் பணியே சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராளர் பதவி வழங்கப்பட்டது.

Related Stories: