கிராம ஊராட்சிகளில் போட்டியிடுவோருக்கு அரசியல் கட்சிகளின் சின்னம் கிடைக்காது... மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: கிராம ஊராட்சி தவிர்த்து மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்றும், கிராம ஊராட்சியில் போட்டியிடுவோருக்கு அரசியல் கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்படாது என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிகாலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டடது. இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி தயார் செய்யப்பட்டு பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதன்பிறகு அவர்கள் அளித்து கருத்துகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குதல், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளட்ட பணிகள் தொடர்பாக உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுவருகிறது.

இதனைத் தொடர்ந்து மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அதன்படி மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரால் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தவிர்த்து அனைத்து அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதாடர்பாக உள்ளாட்சி தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான உத்தரவில் இந்த பகுதியை சேர்ந்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்வு செய்ய, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம். இவர்களுக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். கிராம ஊராட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிட முடியாது. அனைவரும் சுயேச்சை வேட்பாளராக கருதப்படுவர். இவர்கள் யாருக்கும் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது.  போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சுயேச்சை சின்னங்கள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: