ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத்துறை மனுவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமினை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில், மத்தியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின்போது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி அளித்திருந்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு கைமாறாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனத்துக்கு பணம் கைமாறியதாகவும் அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து  இருவரும், தங்களை இந்த வழக்கில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றனர்.இந்நிலையில், இதை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்  நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Related Stories: