நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தண்டவாள பராமரிப்பு மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் காரணமாக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 12க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 4வது நடைமேடையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை எழும்பூர் ரயில்நிலையம் 4வது நடைமேடையில் இருந்து தினமும் இரவு 7.50 மணிக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இயக்கப்படும்.

அதைப் போன்று மறுமார்க்கமாக இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் அதிகாலை 5.09 மணிக்கும், நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 5.53 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையம் வந்தடையும். அங்கிருந்து பயணிகள் புறநகர் ரயில்கள் மற்றும் பேருந்துகள், ஆட்டோ மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம். மேலும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாதது. அதாவது தண்டவாளம் முழுவதும் பிரிக்கப்பட்டு கான்கிரீட் தளம், கம்புகள் புதிதாக அமைக்கப்படுவதால் 4 வது பிளாட்பாரத்தில் எந்த ரயில்களும் இயக்க முடியாத காரணத்தால் சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்புகள் குறைவு. எனவே பயணிகள் சிரமத்தை கவனத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு முறையான அறிவிப்பு செய்து வழக்கம் போல் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: