மோடி - ஜின்பிங் வருகையின்போது கல்வி நிறுவனங்கள் செயல்படும், போக்குவரத்தில் மாற்றம் இல்லை : சென்னை காவல் துறை அறிவிப்பு

சென்னை: மோடி-ஜின்பிங் வருகையின் போது கல்வி நிறுவனங்கள் மூடுதல் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று சென்னை காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் வரும் 11ம் தேதி சென்னைக்கு வருகிறார். இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்றும், அதேபோல், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள வியாபாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கடும் குழப்பத்தில் இருந்தனர்.

இதையடுத்து சென்னை மாநகர காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று ேநற்று வெளியிடப்பட்டது. அதில், 2019, அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற இருக்கும் பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையின் போது, போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம் குறித்தோ, வியாபாரம், கல்வி நிறுவனங்கள் மூடுதல் குறித்தோ, மற்ற நடவடிக்கைகள் குறித்தோ சென்னை காவல் துறை சார்பாக எந்த விதமான அறிவிப்பும் செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: