மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பு 70 மீனவர் கிராமங்களில் போலீஸ் குவிப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் கிழக்கு கடற்கரை சாலை

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் சந்தித்துப் பேசுவதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவும், விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 70 மீனவ குப்பங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி, வருகிற 11ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு காலை 12.30  வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவிடந்தை செல்கிறார். அங்கிருந்து கோவளம் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். அதேநேரத்தில் பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கார் மூலம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்கிறார். மோடியும், கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். கோயிலையும் சுற்றிப் பார்க்கின்றனர். இரவு உணவு சாப்பிடுகின்றனர். அதன்பின்னர் 8 மணிக்கு சீனா அதிபர் சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு திரும்புகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஓட்டலுக்கு திரும்புகிறார்.

12ம் தேதி காலையில் ஜின்பிங்கும், மோடியும் மீண்டும் மகாபலிபுரம் செல்கின்றனர். அங்கு மதியம் வரை இரு நாட்டு உறவுகள், வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு சீன அதிபர் நேரடியாக கார் மூலம் சென்னை விமானநிலையத்துக்கு ஒரு மணிக்கு வருகிறார். அதன்பின் சிறப்பு விமானத்தில் சீனா புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை முடிந்ததும் நேராக கோவளம் செல்கிறார். அங்கிருந்து திருவிடந்தை சென்று, ஹெலிகாப்டரில் சென்னை விமானநிலையத்துக்கு 2 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து டெல்லி பறப்பட்டுச் செல்கிறார். இதனால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு

வருகிறது. 2 நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தங்கும் இடம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தைச் சுற்றி உள்ள 70 மீனவ குப்பங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குப்பங்களுக்கு மட்டும் 18 எஸ்பிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதைத் தவிர டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் நேற்று முதல் அக்டோபர் 13ம் தேதி வரை புரதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்ஜலசந்தி கடல் மார்க்கமாக அந்நிய நபர்கள் ஊடுருவாமல் தடுக்க சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வாகன சோதனையும், கடலுக்குள் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்தும் நடந்து வருகிறது.மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கவும், அந்தப் பகுதியில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்கள் தங்கும் இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நாளை முக்கிய அறிவிப்புகளை போலீசார் வெளியிடுகின்றனர். மகாபலிபுரம், சென்னை ஆகிய 2 இடங்களும் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் கிண்டியில் இருந்து கார் மூலமாகத்தான் மாமல்லபுரம் செல்கிறார். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களின் பட்டியலை, அடையாள அட்டையுடன் சேர்த்து போலீசார் கேட்டு வாங்கியுள்ளனர். சீன அதிபர் செல்லும் நேரத்தில் மட்டும் போக்குவரத்தை மாற்றி அமைக்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: