இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை அடைந்து 5 சதவிகிதமாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2013ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்ததே மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். உற்பத்தி துறையிலும், வேளாண் துறையிலும் ஏற்பட்ட சரிவே, சமீபத்திய மந்த நிலைக்கு காரணம் என மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கூறியிருந்தது.

ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் உற்பத்தியும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளன. இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறுவதாவது; தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மோடி தலைமையிலான அரசுப் பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் தான் தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அளித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது எனவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

Related Stories: