பருவநிலை மாற்றங்களால் பாதிப்பா? இடுக்கி அணையில் நிபுணர்குழு ஆய்வு

*மேற்கூரை அமைக்க கேரள அரசுக்கு பரிந்துரை

கூடலூர் : பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெப்பத்தை தாங்குவதற்காக, இடுக்கி அணைக்கு மேற்கூரை அமைக்க வேண்டுமென அணைகள் பாதுகாப்பு குழு தலைவர் ஜஸ்டிஸ் ராமச்சந்திரன் நாயர் கேரள அரசுக்கும், கேரள மின்வாரியத்திற்கும் அறிக்கை அனுப்ப உள்ளார். கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகளை பார்வையிட்டு அவற்றின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை கொடுப்பதற்காக, அணைகள் பாதுகாப்புக்குழு தலைவர் ஜஸ்டிஸ் ராமச்சந்திரன் நாயர் தலைமையில், அணை பாதுகாப்புக்குழு முதன்மை பொறியாளர் சுப்ரியா, தொழில்நுட்ப பிரிவு முதன்மை பொறியாளர் ஷாஜி, நீர்வளத்துறை பிரிவு முதன்மை பொறியாளர் ஜோஷி, இடுக்கி இணை இயக்குனர் பாலு  ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

குளமாவு அணையை நேற்று முன்தினம் ஆய்வு செய்த இக்குழுவினர் நேற்று, இடுக்கி அணையை ஆய்வு செய்தனர். அணையின் கேலரியில் இக்குழு இரண்டு மணிநேரம் ஆய்வு நடத்தியது. பின் சிறுதோணி அணையின் மதகுகளையும் இயக்கிப் பரிசோதனை செய்தது. ஆய்வுக்குப் பின்னர், பின்னர் அணைகள் பாதுகாப்பு குழு தலைவர் ஜஸ்டிஸ் ராமச்சந்திரன் நாயர் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப சலனம், புவி வெப்பமயமாதல் காரணங்களால் ஏற்படக்கூடிய வெப்பத்தை தாங்குவதற்கு அணைகளில் மேற்கூரை அமைக்க வேண்டும். இடுக்கி அணை கட்டி 40 ஆண்டுகளாகிறது.  கான்கிரீட்டால் கட்டப்பட்ட இந்த அணைக்கு வெப்பத்தை தாங்கும் சக்தி இருந்தாலும், காலப்போக்கில் அது அணையின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

 அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் அணை வெப்பத்தை எதிர் கொள்ளலாம். எனவே, வெப்பத்தை புறந்தள்ளி வெளியேற்றும் வகையில் கடந்த ஆண்டு இடுக்கி அணையின் வெளிப்புறம் முழுவதும் வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்டது. பாணாசுர சாகர் அணைக்கட்டில் சோதனைக்காக அணைக்கு மேற்கூரை இடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்துதான் ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி ஆர்ச் அணையில் இந்த சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில அரசுக்கும், கேரள மின்வாரியத்திற்கும் அறிக்கை கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: