திருநங்கைகள் விருப்பப்பட்டு குற்றத்தில் ஈடுபடுவது கிடையாது: திருநங்கை யாழினி பேட்டி

சென்னை: திருநங்கைகள் விருப்பப்பட்டு குற்றச்செயலில் ஈடுபடுவதில்லை என்று திருநங்கைக்கான அழகிப்போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்ற யாழினி கூறினார்.

திருநங்கைகளுக்கான தேசிய அளவிலான அழகிப்போட்டி டெல்லியில் நடந்தது. இந்தியாவில் இருந்து 16 மாநிலங்கள் பங்கு கொண்டன. இதில் அழகி ராணியாக பெங்களூரை நீத்து என்ற திருநங்கைக்கும் 2வது இடம் சட்டிஸ்கரை சேர்ந்த சைலி என்ற திருநங்கை 3வது இடத்திற்கு தமிழகத்தை சேர்ந்த யாழினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் மூன்றாம் இடம்பெற்ற யாழினி. நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் திருநங்கைகள் அவரை வரவேற்றனர். பின்பு யாழினி நிருபர்களிடம் கூறியதாவது: திருநங்கைகள் வாழ்க்கையே மிகவும் கடினமானது. இந்த சூழ்நிலையிலும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறுவது மிகவும் கடினமானது.

தமிழகத்தை சொல்லி என் பெயரை அழைத்து நான் மூன்றாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வடமாநிலங்களில் உள்ள திருநங்கைகள் பலர் மாடலிங்க் துறையில் சிறப்பாக செயல்படுகின்றனர். அதேபோல் தென் இந்தியாவில் உள்ள திருநங்கைகள் மாடலிங் துறையில் ஈடுபடவேண்டும். அடுத்த ஆண்டு தாய்லாந்தில் சர்வதேச அளவில் திருநங்கை அழகிப்போட்டி நடக்கிறது. அதில் இந்தியாவின் சார்பில் நான் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். திருநங்கைகள் யாரும் விருப்பப்பட்டு பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது கிடையாது. எங்களைப் பெற்றவர்கள் மட்டுமல்ல இந்த சமூகவும் எங்களை ஏற்பதில்லை. அதனால் தான் ஒருசில திருநங்கைகள் தவறு செய்கின்றனர். இதனால் மற்ற திருநங்கைகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: