கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ரசாயன நீர் பொங்கி வருவதால் மக்கள் அச்சம்

ஓசூர்: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1288 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. நேற்று 1306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 1288 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 1288 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. முழுகொள்ளளவான 44.20 அடியில் தற்போது 41.82 அடி தண்ணீர் உள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணையில் நீர் பெருக் கெடுத்து செல்லும் நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கழிவுநீரை, யாருக்கும் தெரியாமல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு ரசாயனம் கலந்த கழிவுநீர், ஆற்று நீரில் கலந்து வருவதால் கடந்த 3 நாட்களாக நுரை பொங்கி வழிகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: