கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சியினர் சந்திப்பு

ஸ்ரீநகர்: கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை, தேசிய மாநாட்டு கட்சியினர் சந்தித்து பேசினர். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதுபோன்ற சூழலில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மெகபூபா உள்பட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது காஷ்மீரில் நிலைமை சீரானதை அடுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்திக் கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் 2 மாத வீட்டுச் சிறையில் இருக்கும் உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லாவை சந்திக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தரப்பில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையை ஏற்று பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆளுநர் சத்யபால் மாலிக் அனுமதி வழங்கினார். இந்நிலையில் பரூக் அப்துல்லா வீட்டுக்கு அக்கட்சியின் ஜம்மு மாகாணத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட குழு சென்றது. அவர்கள் பரூக் அப்துல்லாவை சந்தித்துப் பேசினர். அந்த குழுவினரிடம் பரூக் அப்துல்லா ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி முக்கிய நிர்வாகிகள், பரூக் மற்றும் உமர் அப்துல்லாவை சந்தித்து பேசினர்.

Related Stories: