அடுத்த சில நாட்களுக்கு வட, உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வட, உள்மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான மழை பொழிவைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  நாமக்கலில் 40 மி.மீ, தர்மபுரியில் 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதுதவிர வட, உள்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை  பதிவாகியுள்ளது. நேற்றைய அதிகபட்ச வெப்பநிலை 95.35 டிகிரி பாரன்ஹீட் கரூர் மாவட்டம் கே.பரமத்தியில் பதிவானது. இந்நிலையில் அடுத்த சில  நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வெப்பசலனம், காற்றுசுழற்சி காரணமாக திருவண்ணாமலை, அரியலூர்,  பெரம்பலூர், கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், தர்மபுரி,  கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.சென்னை,  சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு  சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச  வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம். இவ்வாறு வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: