உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதி 2 லட்சத்திலிருந்து 8 லட்சம் ஆக அதிகரிப்பு: பாதுகாப்புத்துறை அறிவிப்பு

புதுடெல்லி: போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.2 லட்சம் என்பதை 4 மடங்கு உயர்த்தி 8 லட்சமாக வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்திய, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் மலைத்தொடரில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரோடு புதைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க பொதுமக்கள் நிதிஅளித்தனர். இதைக்கொண்டு கடந்த 2017ம் ஆண்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ராணுவ நல நிதி(ஏபிசிடபிள்யூஎப்) என்ற நலநிதி திட்டம் தொடங்கப்பட்டது. போரில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நிவாரண நிதியுடன் சேர்த்து இந்த நிதியும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியை 4 மடங்கு அதிகரித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கும் நிதியுதவியை அதிகரிக்க கோரும் கோரிக்கைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ2 லட்சமாக உள்ள இந்த உதவித்தொகை 4 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.8 லட்சமாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: