பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை இரு நாட்டு உயர் அதிகாரிகள் மாமல்லபுரத்தில் மீண்டும் ஆய்வு

சென்னை: பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு, இருநாட்டு உயர் அதிகாரிகளும் நேற்று மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்தனர்.உலக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. இந்நிலையில் வருகிற 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருகின்றனர்.இவர்கள் மாமல்லபுரம் அழகிய புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவைகளை பார்வையிடுகின்றனர். பிறகு சீனா மற்றும் இந்தியா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். இந்த இரு நாட்டு தலைவர்கள் வருகையொட்டி மாமல்லபுரத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு நேற்று காஞ்சிபுரத்திலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சீன நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் முக்கிய அதிகாரிகள் நேற்று மாமல்லபுரம் வந்து இரு நாட்டு தலைவர்கள் பார்த்து கண்டு களிக்க உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு சாலைகள் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதா, மின் விளக்குகள் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதா, பாதுகாப்பு வசதிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வு செய்தனர்.

Related Stories: