இணையதளத்தில் டிரெண்ட் ஆகிறது மதுரை சுற்றுலா வழிகாட்டியின் குதூகல நடன அசைவுகள்: வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வியப்பு

மதுரை: மதுரை சுற்றுலா வழிகாட்டி நம் கலாச்சாரம் குறித்து சுற்றுலாப்பயணிகளிடம் பேசி காட்டிய நடன அசைவுகள் இணையத்தில் ‘டிரெண்ட்’ ஆகியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் மகேந்திர பிரபு. சுற்றுலா வழிகாட்டியான இவர், மதுரை  திருமலை நாயக்கர் மகாலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பரதம், கதகளி நடன முத்திரைகள், அசைவுகளை செய்து காட்டி, நம் பண்பாடு, கலாச்சாரம் குறித்து விளக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை ஐஏஎஸ் அதிகாரி  பிரியங்கா சுக்லா உள்ளிட்ட பலரும் தங்கள் டிவிட்டரிலும் பகிர்ந்துள்ளனர்.

டிரண்டாகி வரும் வீடியோ குறித்து மகேந்திர பிரபு கூறியதாவது: மதுரை மாவட்டம், சோழவந்தான் பூர்வீகம் என்றாலும், மதுரை எல்லீஸ் நகரில் குடும்பத்துடன் இருந்து வருகிறேன். மனைவி, 2 மகள்கள் உள்ளனர். சுற்றுலா வழிகாட்டி  தொழில் என்றாலும், பல ஆண்டுகளாக கற்ற இந்த நடனக் கலையை வெளிப்படுத்தினேன். கடந்த செப்.26ம் தேதி மகாலை சுற்றிக் காட்டியபோது, எதார்த்தமாக அதேநேரம் முழு ஈடுபாட்டுடன் சுற்றுலாப்பயணிகள், சோர்ந்து போகாமலிருக்கும்  விதம் சிறிய கருவியாக இக்கலையின் அசைவுகளை காட்டினேன்.

 

ரசிப்பதற்காக செய்தது, அவர்களிடம் வியப்பை தந்து விட்டது. ஆசிரியராக 7 ஆண்டுகள், சுற்றுலா வழிகாட்டியாக 13 ஆண்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நம் கலைகளை தொடர்ந்து வெளிப்படுத்தியே வந்தேன். சுற்றுலா வருவோர்  அத்தனையும் அறிந்து வைத்திருப்பர். பண்பாடு, நாகரீகம், வரலாறு, புவியியல் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சொல்ல வேண்டும். அத்தனையையும் இணையத்தில் பார்த்து வருகிற அவர்களுக்கு நம் தகவல்கள் பெரிதாக தெரியாது. எனவேதான், பாவனை வாயிலாக வித்தியாசமான வழிமுறையில் நம் கலாச்சார விஷயங்களை தெரிவித்தேன். நடனத்தில் உள்ள முத்திரைகள், அதில் அறிவியல், மருத்துவம் என்ன இருக்கிறது என்பதையும் விளக்கினேன்.

வெளிநாட்டினர் நம்மை கண்டு வியக்கிறார்கள். நமது கூட்டுக்குடும்ப வாழ்க்கை, வேறுபட்ட இன மக்கள் கூட்டாக இருப்பது கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள். அவர்கள் கலாச்சாரத்தில் இந்த கூட்டுறவு இல்லை. கோயில், சர்ச், தர்கா எங்காவது ஒரு  திருவிழா என்றால் அத்தனை சமூகமும்  சேர்ந்திருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். நம் ஆலயங்களில் ஒரு பண்பாட்டு கல்வி படிக்கின்றனர். அவர்களிடம் நம் கலாச்சாரத்தை நான் வெளிப்படுத்திய விதம், இன்றைக்கு டிரெண்டாக பரவி  இருப்பது அளவிட முடியாத மகிழ்வை தந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: