அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவில் வலம் வருமா புதிய யானை?: l ‘ருக்கு’ யானை மறைந்து 18 மாதங்களாகிறது l அறநிலையத்துறை அலட்சியத்தால் பக்தர்கள் அதிருப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு மறைந்து 18 மாதங்களாகியும், புதிய யானையை கொண்டுவரும் முயற்சியை அறநிலையத்துறை எடுக்காதது பக்தர்களிடம் அதிருப்தியை  ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் தனித்துவமான அடையாளமாக திகழ்வது கோயில் யானை. .பக்தர்கள் கோயிலுக்குள் நுழைந்ததும், நான்காம் பிரகாரத்தில் ஆடி அசைந்தபடி நின்றிருக்கும் கோயில் யானையை வியப்போடும்,  உற்சாகத்தோடும் பார்த்து ஆசி பெற்ற பிறகே தரிசனத்துக்கு செல்வது வழக்கம். இத்தனை முக்கியத்துவம் மிக்க கோயில் யானை, கடந்த 18 மாதங்களாக அண்ணாமலையார் கோயிலில் இல்லாதது பக்தர்களை வேதனையடைய செய்திருக்கிறது.

கோயிலில் நீண்டகாலமாக இருந்த செந்தில் வடிவு யானையின் மறைவுக்கு பிறகு, முதுமலையில் இருந்து 7 வயது குட்டி யானை ருக்குவை, கடந்த 1995ம் ஆண்டு கோயிலுக்கு அழைத்து வந்தனர்.  கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி அதிகாலை  கோயில் யானை ருக்கு பரிதாபமாக இறந்தது. .அண்ணாமலையார் கோயில் வட ஒத்தைவாடை வீதியில் மதிற்சுவரையொட்டி ‘ருக்கு’ அடக்கம் செய்யப்பட்டது. கோயில் யானை ருக்கு மறைந்ததும், உடனடியாக புதிய யானையை கோயிலுக்கு  கொண்டுவருவதற்கான முயற்சியை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் அறநிலையத்துறை மெத்தனமாக உள்ளது. அண்ணாமலையார்  கோயிலுக்கு மாதந்தோறும் சுமார் ஒரு கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வருகிறது. மேலும், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான அசையா சொத்துக்கள் கோயிலுக்கு உள்ளன. வருவாய் மிகுந்த இத்திருக்கோயில் நிதியில் இருந்தே புதிய  யானையை வாங்கிவிட முடியும். ஆனால், நன்கொடை மூலம் யானையை வாங்குவதற்காக அனுமதி கேட்டு, கோயில் நிர்வாகம் தரப்பில் அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பினர். ஆனால், அதன்மீதான அனுமதி இன்றுவரை கிடைக்கவில்லை. கோயிலுக்கு யானையை வாங்குவதற்கு வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை போன்றவற்றின் அனுமதி பெறுவது எளிது. மேலும், ரூ.50 லட்சம் வரை நன்கொடையளித்து யானையை கோயிலுக்கு காணிக்கையாக அளிக்க பலரும் முன்வந்து,  கோயில் நிர்வாகத்திடம் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனாலும், அதற்கான தொடர் முயற்சியை அறநிலையத்துறை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அறநிலையத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கே, புதிய யானையை கொண்டுவருவதில் இத்தனை தாமதமா என பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். கோயிலில் யானை இல்லாமல் ஏற்கனவே கடந்த  ஆண்டு தீபத்திருவிழா நடந்து முடிந்தது. எனவே, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் புதிய யானையை கோயிலுக்கு கொண்டுவர வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பமாக  இருக்கிறது.இதுகுறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் கூறுகையில், `பக்தர்களின் உபயம் மூலம் கோயிலுக்கு யானையை வாங்குவதற்கான ஒப்புதல் கேட்டு அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். யானையை வாங்குவதற்கான  முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. யானையை வாங்கித் தருவதாக ஒருசிலர் ஒப்புதலும் அளித்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்குள் யானையை வாங்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம்’’’’ என்றார்.

Related Stories: