புதிய வாடகை நிர்ணயிப்பதில் சிக்கல்: வீட்டை தானமாக எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம்: அறநிலையத்துறை நிபந்தனையால் வாடகைதாரர்கள் அதிர்ச்சி

சென்னை: வீட்டை தானமாக எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய அனுமதிப்போம் என்று அறநிலையத்துறை நிபந்தனை விதித்து இருப்பதால் வாடகை தாரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. இந்த வீடு, கடைகளில் வாடகைக்கு வசித்து வருவோர் பல ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்யாமல்  உள்ளனர். இதனால், வாடகையை உயர்த்த முடியாத நிலை உள்ளது. ஆனால், இதுகுறித்து வாடகைதாரர்களிடம் கேட்டால் நாங்கள் வசிக்கும் வீட்டை தானமாக எழுதி கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்வோம் என்று கோயில்  அலுவலர் தெரிவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:அரசாணை 131ல் பெயர் மாற்றம் செய்ய மனையில் கட்டியிருக்கும் வீட்டை கோயிலுக்கு தானமாக எழுதிக்கொடுக்க வேண்டும் என்று  கூறப்பட்டிருக்கிறது. மேலும் செய்துதரும் நாளில் விதிப்படி புதிய நியாய வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.பெயர்மாற்றம் செய்து கொள்பவர் பல்லாண்டுகளாக குடியிருந்து வருபவர்கள், பல முறை பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தும் அறநிலையத்துறையின் அலட்சியத்தால் பெயர்மாற்றம் செய்து கொள்ள முடியவில்லை.

அப்படிப்பட்டவருக்கு புதியதாக அன்றுதான்  குடிவந்தவர்போல் புதிய வாடகை நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல. நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி  வாடகை வசூல்  செய்வதே நியாயமான செயல். பெயர்மாற்றம்  பற்றிய அறிவிப்பு  ஓர்  கண்துடைப்பு அறிவிப்பாகவே இருக்கிறது. அறநிலையத்துறைக்கு உண்மையிலேயே பெயர்மாற்றத்தை வரன்முறைப்படுத்தவேண்டும், கோயிலுக்கு வருமானத்தை ஊர்ஜிதப்படுத்தவேண்டும் என்ற எண்ணமிருந்தால் வீட்டை தானமாக  எழுதிக்கொடுக்கவேண்டும் என்ற நிபந்தணையை ரத்து செய்ய வேண்டும்.  பெயர்மாற்றம் செய்பவருக்கு தற்போது செலுத்தும் வாடகையையே நடைமுறையில் உள்ள  அரசாணைப்படி தொடர்ந்து செலுத்த அனுமதிக்க வேண்டும். இப்படி  செய்தால் அனைவரும் பெயர்மாற்றம் செய்துகொள்ள முன்வருவார்கள். அறநிலையத்துறைக்கும் வாடகை பாக்கிகள் முழுவதுமாக வசூலாகும். வரன்முறைப்படுத்தும் செயல் 100 சதவிகிதம் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: