கோயம்பேடு மார்க்கெட்டில் பேனர்கள் அதிரடி அகற்றம் : அதிகாரி எச்சரிக்கை

அண்ணாநகர்: குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரை சேர்ந்த சுபஸ்ரீ (23), பி.டெக். முடித்துவிட்டு துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் 12ம் தேதி மதியம் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை நடுவில் வைக்கப்பட்ட அதிமுக பிரமுகர் இல்ல வரவேற்பு பேனர்களில் ஒன்று காற்றில் பறந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி விழுந்த அவர்மீது தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பொது இடங்களில் பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. மேலும், ஆங்காங்கே அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பேனர்கள், கட் அவுட்கள் அதிகளவில் வைக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில், கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் நேற்று கோயம்பேடு மார்க்கெட் வந்து ஆய்வு செய்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த கட் அவுட்கள், பேனர்களை அகற்றினார். பின்னர், வியாபாரிகளை அழைத்து இனிவரும் காலங்களில் காவல்துறை  அனுமதி  பெறாமல் எந்தவிதமான பேனர்களோ, கட் அவுட்களோ ஏதும் அங்காடி வளாகம் மற்றும் அங்காடி சாலைகளில் வைக்க கூடாது என்றும், மீறும் பட்சத்தில் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Related Stories: