திருமங்கலம் அருகே ரயில்வே பாலத்தில் பயங்கர விரிசல்

திருமங்கலம் : திருமங்கலம் அருகே கண்மாயில் மேல் உள்ள ரயில்வே பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருபுறமும் ஏற்பட்டுள்ள விரிசல், பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் அகல ரயில்பாதை திருமங்கலம், விருதுநகர் வழியாக செல்கிறது. இதில் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் கரிசல்குளம் கண்மாயில் ரயில்வே பாலம் அமைந்துள்ளது. பாலம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில் தற்போது இந்த பாலத்தின் இருபுற பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு நாளுக்குநாள் பெரிதாகி வருகிறது. பாலம் அமைந்துள்ள கரிசல்குளம் கண்மாய் மொத்தம் 111 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் 62.32 ஹெக்டேர் அளவுள்ள கண்மாய் பகுதிக்கு ரயில்வே தரைப்பாலத்தை தாண்டிதான் கண்மாய் நீர் செல்லவேண்டும்.

மழைக்காலங்களில் கரிசல்குளம் கண்மாய் நிரம்பிகாணப்படும் போது பாலத்தில் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவது வழக்கம். இதே போல் கிராசிங் சமயங்களில் இந்த பாலத்தில் ரயில்கள் நின்று செல்லும். இந்த வழித்தடத்தில் தினசரி வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து வடமாவட்டங்களுக்கும் செல்லும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.மின்னல் வேகத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் அதிர்வடைந்து விரிசல் அதிகரித்து வருவதாக சிவரக்கோட்டை பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது விரிசல் அடைந்து பாலத்தின் அருகே மதுரை - தூத்துக்குடி இரட்டை அகலரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரயில்வே அதிகாரிகள் அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து பணிகளை பார்வையிட்டு சென்றாலும், விரிசல் அடைந்த பாலத்தை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்வே பாதையில் பாலம் விரிசல் அடைந்துள்ளதை இதுவரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலத்தில் இருபுறமும் ஏற்பட்டுள்ள விரிசலை உரிய நேரத்தில் அதிகாரிகள் பழுது நீக்காவிட்டால், பெரிய அளவிலான விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக உள்ளூர் கிராமமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அச்சம் தெரிவித்தனர். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விரிசல் அடைந்துள்ள கண்மாயில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை உடனடியாக சரி செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: