பெரம்பலூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மீது கல்லூரி பேருந்து மோதி 5 பேர் படுகாயம்: கொந்தளிப்பில் மக்கள்!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். அதிவேகமாக கல்லூரி பேருந்து சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூரில் ஸ்ரீதனலட்சுமி சீனிவாசன் என்ற தனியார் கல்லூரி பேருந்து, வழக்கம்போல் குன்னம் பகுதியில் இருந்து பெரம்பலூருக்கு கல்லூரி மாணவர்களை ஏற்றி கொண்டு வந்தது. குன்னம் அருகே சித்தளி என்ற கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது, அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளது. அப்போது, சித்தளி கிராமத்தின் சாலையோபிரத்தில் நின்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதியது. அதில் 5 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த 5 மாணவிகளும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கல்லூரி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. மேலும், சாலையோரமாக நின்று கொண்டிருந்த மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பேருந்து ஓட்டுனர்கள் மீதும் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அதே வழியாக வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான 10 பேருந்துகளை நிறுத்தி அதன் கண்ணாடிகளை பொதுமக்கள் உடைத்துள்ளனர். விபத்து நேர்ந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினர் வந்து விளக்கம் கொடுத்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: