இலங்கை கைதிகள் தப்பிய விவகாரம் தமிழக அரசு நடவடிக்கை ஐகோர்ட் கிளை அதிருப்தி: எஸ்பி ஆஜராக உத்தரவு

மதுரை:  இலங்கையைச் சேர்ந்த சங்கசிரந்தா, முகம்மது சப்ராஸ் ஆகியோர் தமிழக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு காணவில்லை என மதுரை ஐகோர்ட் கிளையில்  தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமநாதபுரம் ஜேஎம் 2 மாஜிஸ்திரேட்டின் விளக்கம் மற்றும் வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த ஆவணங்களை பதிவுத்துறையில் பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு கூறினர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆகியோர் ஆஜராகி, ‘‘தப்பிச் சென்ற இருவரையும் பிடிப்பது தொடர்பாக டிஜிபிக்கு, ராமநாதபுரம் எஸ்பி கடிதம் எழுதியுள்ளார்.

இரண்டாவதாக நினைவுப்படுத்தியுள்ளார். டிஜிபி அரசு செயலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தமிழக அரசு தரப்பில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் போலீசார் தரப்பில் மிகவும் அலட்சியமாக உள்ளனர். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இதில், யாரும் அக்கறை காட்டவில்லை. நீதிமன்றம் அறிவுறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டது. தமிழக அரசின் கடிதம் அநேகமாக மத்திய அரசுக்கு இன்று (நேற்று) தான் கிடைத்திருக்கும். தமிழக அரசு மற்றும் போலீசாரின் அலட்சிய ேபாக்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்ைத தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். ராமநாதபுரம் எஸ்பி ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை அக். 15க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: