இடைதரகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கசான்று பெறும் வசதி: பதிவுத்துறை திடீர் முடிவு

சென்னை: இடைதரகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கசான்று பெறும் வசதியை கொண்டு வர பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. புதிதாக வீடு மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குபவர்கள் அந்த சொத்துகளை முந்தைய விவரங்களை தெரிந்து கொள்ள வில்லங்கச் சான்றிதழ் பெறுவது அவசியமானது. இந்த வில்லங்க விபரங்களை பதிவுத்துறை இணைய  தளத்தில் இலவசமாக தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் வங்கிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றிக்கு நேரடியாக விண்ணப்பித்து பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களே ஏற்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் ஆன்லைன் பத்திரப்பதிவை போன்று, ஆன்லைனில் வில்லங்கசான்று பெறும் திட்டத்ைத கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் ஆன்லைனில் வில்லங்கசான்று  பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது.ஆனால், ஆன்லைனில் பொதுமக்களே நேரடியாக வில்லங்க சான்று பெறுவது என்பது மிகவும் குறைவு தான். அவர்கள் ஆவண எழுத்தரை தான் அணுகி வில்லங்க சான்று பெற விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. எனவே, கட்டணம் தொடர்பான  அறிவிப்பு வெளியிடாததை பயன்படுத்தி கொண்டு தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் இடைதரகர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 1 ஆண்டுக்கு பார்க்க வேண்டுமென்றால் ரூ.141க்கு பதில் ரூ.500ம், 32  ஆண்டுகளுக்கு ரூ.440க்கு பதில் ரூ.2 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு ஏராளமான புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம்  வில்லங்கசான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பணியாளர் ஒருவரை நியமனம் செய்து அவர் மூலம் இந்த வில்லங்கசான்று வழங்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கூடுதலாக பணம்  கொடுத்து வில்லங்கசான்று பெறுவது தடுக்கப்படும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வில்லங்க பார்ப்பதில் ஏற்படும் வில்லங்கம்:வில்லங்கசான்று பெறுவதற்கு ஆன்லைன் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்தால் சில நேரங்களில் கட்டணம் செலுத்தினால் கூட வில்லங்கசான்று வருவதில்லை. இது குறித்து பதிவுத்துறை அலுவலக புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டால்  கூட உரிய பதில் அளிப்பதில்லை. இதனால், கட்டணம் செலுத்தியவர்கள் வில்லங்க சான்று கிடைக்காமலும், கட்டணம் திரும்ப பெற முடியாமலும் சார்பதிவாளர்களை அணுகுகின்றனர். அவர்கள், கட்டணம் திருப்பி பெற பதிவுத்துறை ஐஜி  அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர். இதனால், சில நேரங்களில் பொதுமக்களுக்கு, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: