புழல் சிறை முறைகேட்டை தட்டிக்கேட்ட கைதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: கண்காணிப்பாளர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புழல் சிறையில் நடைபெறும் முறைகேடுகளை தட்டி கேட்ட கைதி மிரட்டப்பட்டது தொடர்பான வழக்கில் 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு  பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிதாக தயாரிக்கப்படும் காலணிகளுக்கு  பாலிஷ் செய்யும் பணிக்காக வழங்கப்பட்ட கூலி காலணி ஒன்றுக்கு  49 பைசாவில் இருந்து  89 பைசாவாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பழைய கூலி  தொகையான 49 பைசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பாண்டியன் என்பவரின் மனைவி ஸ்டெல்லா மேரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், அரசு நிர்ணயிக்கும் தொகை மற்றும் ஊதிய குறைப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு  தகவல் உரிமை சட்டத்தின் கீழ் புழல் சிறை பொது தகவல் அதிகாரிக்கு மனு அளித்தேன். மனுவுக்கு இதுவரை பதில் வரவில்லை. இந்நிலையில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவை திரும்ப பெறாவிட்டால், என் கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து விடுவதாகவும், வேறு சிறைக்கு மாற்றி விடுவதாகவும் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மிரட்டி வருகிறார். எனவே, எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். கணவரை புழல் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அக்டோபர் 16ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு உத்தரவிட்டது.

Related Stories: