நகராட்சிகளில் பாதாள சாக்கடை பராமரிப்பு செய்ய குடிநீர் வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை கவனிக்க தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தனி பிரிவை அமைக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் 5 ஆண்டுகளுக்கு பராமரித்தது. பின்னர் அந்த பணி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், முறையான பராமரிப்பு பணி நடைபெறவில்லை. கழிவுநீர் வடிகால்களை பராமரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. குழாய்கள் உடைந்து கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மற்றும் பிற உள்ளாட்சிகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டங்களை பராமரிக்க தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தனிப்பிரிவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நவம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக நகராட்சி நிர்வாக துறை செயலாளர் மற்றும் ஆணையர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: