மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாமல்லபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம், மற்றும் உயர் அதிகாரிகளும் ஆய்வின் போது உடனிருந்தனர். பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் பகுதிகளை பார்வையிடுகிறார்கள். இதையடுத்து இந்த பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதோடு, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரம் நகரமே புதுபொலிவோடு காட்சி தருகிறது. இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு செயலர் விஜய் கேஷவ் கோகலே, மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்திருந்தனர்.

பணிகளை வேகப்படுத்தி மாமல்லபுரத்தை 10-ந் தேதிக்குள் பசுமை நகரமாகவும் மாற்றி குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாகவும், புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: