மேலூர் அருகே பாரம்பரியமாக நேர்த்திக்கடன் செலுத்தும் வைக்கோல் பிரி திருவிழா

மேலூர்:ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றிக் கொண்டு, பெண்கள் தங்கள் தலையில் மதுக் கலயங்களை ஏந்திக் கொண்டும், கைகளில் உருவ பொம்மைகளை சுமந்து கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தும் பாரம்பரிய  திருவிழா மேலூர் அருகே

நடைபெற்றது.மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள வெள்ளலூர் 60 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதியை சேர்ந்தவர்கள் இன்றளவும் இதை வெள்ளலூர் நாடு என்றே அழைக்கின்றனர். இவ்வூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயில்  திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக இவ் ஊர்களை சேர்ந்தவர்கள் பிற மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் இத் திருவிழாவிற்காக வந்து  விடுவார்கள்.

  கடந்த 15 நாட்களுக்கு முன்பு 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிபட கூடிய 7 சிறுமிகளை கோயில் பூசாரி தேர்வு செய்தார். தேர்வு பெற்ற அந்த 7 சிறுமிகளும், இந்த 15 நாட்களும்  இரவில் கோயிலில் தங்கி, பகலில் 60 கிராம மக்களையும் சந்தித்து ஆசிர்வாதம் வழங்கினர். கிராம மக்களும் அச் சிறுமிகளை தெய்வமாகவே எண்ணி வணங்கி வந்தனர். இந்த 15 நாட்களும் இப்பகுதியில் உள்ள 60 கிராம மக்களும் கடும்  விரதம் இருந்தனர். உணவில் எண்ணெய் சேர்ப்பது கிடையாது, மரங்களை வெட்டுவது கூடாது, பூமியை தோண்டி பணிகள் செய்வது, கட்டிடங்கள் கட்டுவது நிறுத்தம் என இப்பகுதியில் இந்த 15 நாட்களும் ஒரு தவமாகவே கிராம மக்கள்  வாழ்ந்து வந்தனர்.

  திருவிழவிற்கு வர முடியாமல் வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்த விரதத்தை அங்கேயே கடை பிடிப்பது இவர்கள் வழக்கம். திருவிழாவின் நிறைவு நாளான நேற்று ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றிக் கொண்டு,  முகங்களில் பல்வேறு விதமான முகமூடிகளை அணிந்து கொண்டு 7 கிமீ தூரம் ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதே போல் விரதம் இருந்த பேரிளம் பெண்கள் தங்கள் தலையில் மதுக்கலயத்தை ஏந்திக் கொண்டு கோயில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்களை பின் தொடர்ந்து இளம் பெண்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும்  விதமாக, விதவிதமான மண் பொம்மை சிலைகளை கைகளில் சுமந்து கொண்டு இவர்களை தொடர்ந்து சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, 7 கி.மீ., தொலைவில் உள்ள குறிச்சிப்பட்டியில் உள்ள பெரிய ஏழைகாத்தம்மன் கோயிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 15 நாட்கள் விரதத்தை தொடர்ந்து  இன்று வீடுகள் தோறும் கிடா விருந்து நடைபெறும்.

Related Stories: