ஐஏஎஸ் அதிகாரிகள் சத்யகோபால், மோகன் பியாரே ஓய்வு தலைமை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், லஞ்ச ஊழிப்பு ஆணையர் மோகன் பியாரே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய்  நிர்வாக ஆணையராக இருந்த கே.சத்யகோபால் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகன் பியாரே ஆகியோர் நேற்று ஓய்வு பெற்றனர். இதையடுத்து சத்யகோபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.வருவாய் நிர்வாக ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த சத்யகோபால்,  தமிழகம் முழுவதும் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மற்றும் வெள்ளம் போன்ற பெரிய ஆபத்துக்களை வரும்முன் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்றதை தொடர்ந்து அவர்களுக்கு பதில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஓய்வுபெற்றதையொட்டி அந்த பொறுப்பை தற்போது போக்குவரத்து துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்துக் கொள்வார். லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகன் பியாரே ஓய்வுபெற்றதையொட்டி அந்த பொறுப்பு தலைமை செயலாளர் சண்முகத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: