தேவையில்லாமல் புகுத்தப்பட்ட நீட் தேர்வால் ஆயுஷ் கலந்தாய்வில் 450 இடங்கள் காலி : மதிப்பெண் குறைக்க வேண்டுகோள்

சென்னை: தேவையில்லாமல் புகுத்தப்பட்ட நீட் தேர்வு காரணமாக பலர் ஆர்வம் காட்டாததால் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின்னர் 450 இடங்கள் காலியாக உள்ளன. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நீங்கலாக சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக்கியது. இந்நிலையில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் 1,455 பேருக்கு செப். 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது. இதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் அரசு ஒதுக்கீடு இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டது.

இந்நிலையில் யுனானி படிக்க உருது மொழி கட்டாயம் என்பதால் அரசு யுனானி கல்லூரியில் 41 இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வின் முடிவில் அரசு ஒதுக்கீட்டின்கீழ், 142 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 300 இடங்கள் காலியாக உள்ளது.  இதுதொடர்பாக இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை நிர்வாக ஒதுக்கீடு இடங்களை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளே நிரப்பின. இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி இயக்ககம் சார்பில் நிரப்புகிறோம். நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் மாணவர்கள் சேராமல் இருப்பது வழக்கமான ஒன்று தான். குறைந்த பட்ச நீட் தேர்ச்சி மதிப்பெண் ‘107’ பெற்றவர்களை அழைத்து விட்டதால், தகுதி மதிப்பெண்ணை குறைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

Related Stories: