கண்டக்டரை தாக்கிய ஆயுதப்படை காவலர்கள்; மாவட்ட எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நெல்லை: நெல்லையில் அரசு பேருந்து கண்டக்டரை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் மாவட்ட எஸ்.பி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள மனித உரி ஆணையத்தின் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. குமுளியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் கூடங்குளத்திற்கு பணி  நிமித்தமாக செல்வதற்காக ஆயுதப்படை காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர் நெல்லையில் ஏறினர். மூன்றடைப்பு அருகே சென்ற போது  கண்டக்டர் ரமேஷ், சீருடையில் இருந்த காவலர்களிடம் பஸ் பயணத்திற்கான வாரன்ட் கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் திடீரென கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் கண்டக்டர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. ஓடும் பஸ்சில் தன்னை தாக்கிய போலீசார் மீது கண்டக்டர் புகார் அளித்தார்.

இதுகுறித்து மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி அரசு பஸ் கண்டக்டரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக திட்டியது, தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மகேஷ், தமிழரசன் ஆகிய இரண்டு போலீசாரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கண்டக்டரை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் மாவட்ட எஸ்.பி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: